காத்தான்குடியின் மூத்த எழுத்தாளரும் பஸ்டிப்போ முகாமையாளருமான ஏ.எல்.எம் பழ்லுல்லாஹ் அவர்கள் கடந்த 30.11.2012 அன்று இறையடி சேர்ந்ததையடுத்து எழுதிய கவிதை
-மதியன்பன்
அர்த்த ராத்திரியில்
ஊடகச் செய்தியொன்று
ஊரின் உறக்கத்தை
உசுப்பிவிட்டுச் சென்றது
அது
ஊடகவியலாளர் பழ்லுல்லாஹ்
உறங்கிவிட்டார் நிரந்தரமாக
என்பதால்...
ஊடக உலகத்தில்
எங்களோடு
ஒன்றித்துப் போனவனே
நீ...
மூத்தவன்
ஊடகத் துறையில்
உன் அறையில் வளந்தவர்கள்
இன்னும்
ஊடகத் துறையோடு
ஒன்றித்து நிற்கிறார்கள்;.
நீ மட்டும்
இளைப்பாறி
இறைவனிடம் சென்று விட்டாய்.
நன்றியோடு நினைக்கிறேன்
என் முதல் செய்தி
உன் மூலம்தான்
ஊடக உலகுக்கு அறிமுகமானது.
வெற்றியோ தோல்வியோ
நீ
கொண்ட கொள்கை மாறமாட்டாய்
உன் கம்பீரம்
அதை உறுதிப்படுத்தும்
மரணத்தை நம்புகிறோம்
ஆனால்
செய்தியாளனே செய்தியானபோது
நிமிடங்கள் சில
நிலை குலைந்து போனோம்.
பழ்லுல்லாஹ்
வைகறையில் வருவாய் நீ
பஸ் டிப்போவுக்கு
நீ ஓதும்
குர்ஆன் ஓசைதான்
அருகில் குடியிருப்போரை
சுபஹூக்கு எழுப்பிவிடும்.
அதிக நேரம்
தக்வா பள்ளியில்தான்
தங்கியிருப்பாய்
தொழுகை நேரம் தொடங்கும் வரை..
பழ்லுல்லாஹ்
நீ
ஓடியோடி செய்தி சேகரிப்பாய்
உலகுக்கு வெளிப்படுத்த..
இப்போது
ஆடி அடங்கிப் போனாய்
நாம்
அனுதாபத்தை வெளிப்படுத்த..
பழ்லுல்லாஹ்
அழலாம், ஆறுதல் கூறலாம்
தொழுது அடக்கிவிட்டு
துயரத்தோடு போகலாம்
ஆனால்
உன் இறப்பு நிகழ்வை
இறக்கி விட்டுப் போக முடிய வில்லையே
அது ஏன்..?
இறைவா..!
உன்னருளை
இன்னாருக்கும் வழங்குவாயாக..!
சுவனத்திற்கு
சொந்தக் காரனாக
ஆக்குவாயாக..!
ஆமீன்.
நன்றி
No comments:
Post a Comment