24 March 2013

வாழ்தல் மீதான வன்முறைகள்


காத்தான்குடி இளம் எழுத்தாளர் முகைதீன் சாலி அவர்கள் எழுதிய வாழ்தல் மீதான் வன்முறைகள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நிகழ்வில் பாடிய கவிதை

மதியன்பன்

இலக்கிய நிகழ்வென்றால்
அது
நயாகராவில் நனைவது போல்
நந்தவனத்தில் நடப்பது போல்
ஒரு சுகமிருக்கும்


கொழும்பு வீதியில்
குரும்பை ஒன்று குடித்தது போல்
குற்றால அருவியில்
குளித்து விட்டு வந்தது போல்
இனிமையான நிகழ்விருக்கும்
இந்த நிகழ்வுகள்
இப்போது என் இதயத்தை
இலேசாக
கிள்ளி விட்டுச் செல்கிறது.

ஹம்பாந்தோட்டை ஹாபரிலிருந்து
காத்தான்குடி கான் வரை
இன்று
ஊழல் பற்றிப் பேசும் போது
முகைதீன்சாலி
வாழ்தல் மீதான வன்முறைக்கு
வரப்பு கட்டியிருக்கிறார்.
அதனை
நயில் நதி போல்
நளினமாய் ஓட விட்டிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற
தேர்தல் தொகுதிகளாய்
அவரது
கதைத் தொகுதிகளுக்குள்
பல கலவரங்கள்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
விடிந்ததும்
வெளியான முடிவுகள் போல்
பல
வியப்பையும் தந்துள்ளன.

ஓசோன் படலத்தின்
ஓட்டை கண்டு ஒப்பாரி வைப்பது போல்
இவன்
வாழ்தல் மீதான வன்முறை கண்டு
வாயடைத்து நிற்கிறான்.

சாத்திரம் சொல்வது போல்
இவன்
சமூகத்துப் பிரச்சினைகளை
சல்லடை போட்டு
சலித்தெடுத்து
காத்திரமாய்
கதைகளாய் தந்துள்ளான்.

விதைகளை விருட்சமாக்கும்
வித்தை கற்றதானால்
அதனைக் கதைகளாக்கி
நம் முன்னே
காவியமாக்கித் தந்துள்ளான்
ஓவியமாய் வரைந்துள்ளான்.

இவனது கதைகள்
நிஜங்களின் விதைகள்
சமூகச் சாக்கடைகளுக்கு
மாபெரும் உதைகள்.

அதிகாரக் கண்களுக்கு
விருந்து போட்டு
விருது பெறுபவர் மத்தியில்
சமூகப் புண்களுக்கு
மருந்து போட்டு
காயங்களை கட்டுப்படுத்தியவன் இவன்.

நிலாவெளிக் கடற்கரையில்
நீந்தி விளையாடும் குழந்தைகள் போல்
இவன்
கதைகளில் வார்த்தைகள்
வளைந்து விளையாடுகின்றன.

இவன்
பாக்களைப் படிக்கின்ற போது
உடல் மீது
பூக்கள் வந்து விழுவது போல்
புத்துணர்ச்சி
புறப்பட்டு வரும்

விடிய விடிய எழுதிவிட்டு
விடிந்ததும்
எழுத்தாளர் ஆகாமல்
சின்னத்திரையின் சீரியல் போல்
ஆண்டு பல படித்தபின்
அமைதியாய்
ஆக்க இலக்கியம் தருபவன்  இவன்!

குளத்தில் சிலர்
குறட்டை மீன் பிடித்து
இலக்கிய
சந்தைக்குத் தருகிறார்கள்!
ஆனால்
சமுத்திரத்தில் சுறா பிடித்து
இள வயதில்
சாதனை படைத்தவன் இவன்

இறுதியாய்
இவனது படைப்புகள் கண்டு
வானத்து மீன்கள் மட்டுமல்ல
நமது வீட்டு
ஆனத்து மீன்களும் ஆமீன் சொல்லும்..
என்று கூறி விடைபெறுகிறேன்.
அதனால் நாமும்
வாழ்த்துவோம் வரவேற்போம்.

No comments:

Post a Comment