24 March 2013

சிறுகதைச் செல்விக்கோர் செந்தமிழ் வாழ்த்து


காத்தான்குடி இஸ்லாமிய இலக்கியக் கழகம் சிறுகதைச் செல்வி காத்தான்குடி பாத்திமா அவர்களுக்கு  வழங்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றின் போது பாடிய வாழ்த்துக் கவிதை

மதியன்பன்

குப்பியோடே
நீ தப்பியோடு என்று
சின்ன வயதில் நான்
சின்னத்தனமாய்
கவிதைகள் என்று கிறுக்கிய போது
பக்கத்து வீட்டுப் பாத்தும்மாவை
நான்
கவிஞராகக் கண்டு கொண்டேன்


விடியவிடிய எழுதிவிட்டு
விடிந்ததும்
எழுத்தாளராக வேண்டு மென்று
ஏங்குகின்றனர் பலர்

ஆனால்
சின்ன வயது தொட்டே
தன் எண்ணக்கருக்களுக்கு
உருக் கொடுத்ததால்
எழுத்தாளரானவர் இவர்

அதனால்
பாத்தும்மா
பலரது உள்ளங்களை
கொள்ளை கொண்ட ஆத்தும்மா

நானறிய
ஆத்திரம் கொள்ளாமல்
அமைதியாய் நின்று
ஆக்க இலக்கியம் தருபவர்
பாத்திரங்களை
பக்குவமாய்க் கையாள்பவர்

சாத்திரம் சொல்வது போல்
சமூகத்துப் பிரச்சினைகளை
சல்லடை போட்டு வார்;த்தெடுத்து
காத்திரமாய்
கதை கவிதைகளில் சொல்பவர்.

அதிகாரிகளுக்கு விருந்து போட்டு
பலர் விருது பெறுகிறார்கள்
ஆனால்
சமூகப் புண்களுக்கு
மருந்து போட்டதனால்
விருது பெற்றவர் இவர்

கலா பூசணம் கதைச்சுடர்
சிறுகதைச் செல்வி
முதற்பெண் எழுத்தாளர்
என்றெல்லாம்
பத்திரங்கள் வழங்கி
முத்திரை குத்தப்பட்டவர்.

இலக்கிய இல்லறத்தில்
இவருக்கு இரண்டு குழந்தைகள்
மூன்றாம் குழந்தை
கருவிலே
முறுவலித்துக் கொண்டிருக்கிறது.

நாதவறி வாய் இடறி
நாமம் சூட்டப்பட்டிருக்கிறது.

இவர்
விதைகளை விருட்சமாக்கும்
வித்தை கற்றவர்.
அவற்றை
காவியம் படைக்கும்
ஆற்றல் பெற்றவர்.

பாத்தும்மா
பலரது உள்ளங்களை
கொள்ளை கொண்ட ஆத்தும்மா..

மூத்த எழுத்தாளர்
முதுபெரும் கவிஞர்
அத்தனையும் முத்துக்களாய்
அள்ளித்தந்தவர்
பொய்த் தூக்கங்களுக்கு
புதுவிளக்கம் சொன்னவர்

நாட்டு நடப்புக்களை
நாதவறாமல் நயம்படச் சொல்பவர்.

தன்பெயரோடு
ஊர்; பெயர் சேர்த்து
நம்ஊருக்கு பெருமை சேர்த்தவர்

வடக்கின் வசந்தம் போல்
வார்த்தைகளுக்கு
நீரோட்டம் கொடுத்து
வேரோட்டம் பார்த்து
பலரது பாராட்டைப் பெற்றவர்.

பாத்தும்மா
பலரது உள்ளங்களை
கொள்ளை கொண்ட ஆத்தும்மா..

பாத்தும்மாவின் படைப்புக்களை
வாசிக்கின்ற போது
நயாகரா நீர் வீழ்ச்சியில்
நனைவது போல்
ஒரு புத்துணர்ச்சி புறப்பட்டு வருகிறது

இவரது
கலைப் பார்வைக்கு முன்னால்
கற்பனைகள்
கைகட்டி நிற்க
நிஜங்கள்
நிம்மதி தேடிக் கொள்கிறது.

சமூக வானொலி றிஸாலாவில்
சத்தியத்திற்காய்
குரல்கொடுத்தவர் இவர்

இலங்கை வானொலி
முஸ்லிம் சேவை
கவியரங்கு என்றெல்லாம்
கருத்துக்கள் பல
வழங்கிச் சென்றவர்
தன் கம்பீரக் குரலால்
அப்போது முழங்கிச் சென்றவர்

ஒரு ஆணின் வெற்றியின் பின்னால்
பெண்ணிருப்பார்
ஆனால்
தன் வெற்றியின் பின்னல்
ஒரு ஆண் இருப்பதை
சுட்டிக் காட்டியவர்
தைரியமாய் தன் கனவனை
தொட்டுக் காட்டியவர்

பாத்தும்மா
பலரது உள்ளங்களை
கொள்ளை கொண்ட ஆத்தும்மா..

நன்றியுடன் - மதியன்பன்

No comments:

Post a Comment