24 March 2013

பா வேந்தனுக்கோர் பாமாலை


எழுத்தாளரும் கவிஞருமான மௌலவி சுபைர் பலாஹி அவர்கள் எழுதி வெளியிட்ட அழகான இருட்டு கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவின்போது அவரைப் பாராட்டி எழுதி வாசித்த கவிதை

-மதியன்பன்




"அழகான இருட்டு
இது
இருண்டு போன இதயங்களுக்கு
ஒளி தரும்
கவிஞர் ஸூபையிரின்
காத்தரமான கவிதை நூல்.

இவன் தென்றல் மாதிரி
இவனுக்குள்
பூகம்பம் ஒன்று
புதைந்து கிடக்கிறது.
பொங்கியெழுந்தால்
பொல்லாங்கெல்லாம்
பொசுங்கிப் போகும்.

விதைக்குள் தூங்கும்
விருட்சம் போல
இவனது கவிதைகளுக்குள்
ஒரு காவியமே
கண்மூடிக் கிடக்கிறது.

இவன் சிரித்தால்
சில்லறைகள் சிதறி விழும்.
செல்வந்து விழுவது போல
செந்தமிழும் சேர்ந்து வரும்.

இவன் பேசினால்
அதிலொரு
கலகலப்புக் கலந்திருக்கும்
நகைச்சுவை
இவனோடு
நடைபயின்று வரும்.

இவன்
மரபுக்கவிதையை
மணந்து கொண்டவன்.
ஆனாலும்
புதுக்கவிதையோடு
புல்லாங்குழல் வாசிப்பவன்.

இவனுக்கு
இலக்கியமென்றால்
இல்லத்தரசி மாதிரி
இவன்
இலக்கியமில்லாமல்
இயல்பு வாழ்க்கையில்
இருக்க மாட்டான்.

ஸூபைர்
இல்லறத்தைப்போல்
இலக்கியத்தையும்
அதிகம் நேசிப்பவன்.

இவன் பாவொன்றைப் படிக்காமல்
அல்லது படைக்காமல்
படுக்கைக்குப் போகமாட்டான்.

இவனது
பேச்சும் மூச்சும்
ஏன்
ஏச்சுக்களும் கூட
தமிழ்த்தாயின் வீச்சுக்கள்தான்.

இவனுக்கு
பார்வை பட்டுப் போனாலும்
நேர்மையும் நிதானமும்
கெட்டுப் போகவில்லை.

இவன்
இந்த நூற்றாண்டின்
இணையில்லாக் கவிஞன்.
இந்தக் கவிதை நூல்
இதற்கு சாட்சி சொல்லும்.

இவன்
கூளாங் கற்களுக்குள்
ஒரு கோமெதகம்.
பல
கலா முகங்களுக்குள்
இவனொரு நிலா முகம்

இவன்
இலக்கியத்திற்காகப் பிறந்தவன்
இவனது
கலைப் பார்வைகள்
கட்டுப்படுத்த முடியாதவை

இவனுக்கு
காணுகின்ற காட்சி யெல்லாம்
கருக்கள்தான்
கற்பக தருக்கள் போல

இவனிடம்
கற்பனைகள்
கைகட்டி நிற்கும்
நிஜங்கள்
இவனிடத்தில் நிம்மதி தேடும்

உண்மைணைச் சொன்னால்
இவனொரு
புதுமையின் பொக்கிசம்
இவனது கவிதைகள்
காயப்பட்ட மனசுகளுக்கு
கட்டுப் போடக்கூடியவை

இவனது
பாக்களைப் படிக்கின்றபோது
உடலின் மேலே
பூக்கள் வந்து விழுவது போல்
புத்துணர்ச்சி பொங்கி வரும்

ஸூபைர்
இவன் எழுதுவான்
அது வார்த்தைகளுக்கு வஸந்த காலம்.
சில வாரிசுகளுக்கு
கஸந்த காலம்.

இவனது கவிதைகள்
இலக்கிய நெஞ்சங்களுக்கு
இதய ராகம்
புதிய விடியலுக்கான
பூபாள ராகம்."

நன்றியுடன் - மதியன்பன்


No comments:

Post a Comment