24 March 2013

ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்



தம்புள்ள பிரதேசத்தில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் மக்களால் வணக்க வழிபாடுகள் செய்ப்பட்டு வந்த பள்ளிவாயல் ஒன்று பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பௌத்தர்களால் 00.04.2012 அன்று சேதமாக்கப்பட்டதைக் கண்டித்து எழுதிய கவிதை.

 -மதியன்பன்-

ஆயுதப் படைகளின் ஆசியுடன்
அல்லாஹ்வின் இல்லத்துள்
இன்று
அத்துமீறல் அரங்கேறியது.
பேரினவாதிகளின்
மற்றுமொரு
போரியல் பொறிமுறை..!


இதை
கண்டிக்கவும், தண்டிக்கவும்
தைரியம் இல்லை யாருக்கும்.
முள்ளுக்கு வாலாட்டும்
முதுகெலும் பில்லா இவர்களால்
என்னதான் செய்ய முடியும்..?

ஜெனீவாவில்
பிரேரணை யென்றால்
பள்ளிகளில் பகிரங்க அறிவிப்பு
அரசுக்கு ஆசிவேண்டி
ஆர்ப்பாட்டங்களும் பிரார்த்தனைகளும்
வெற்றுக் கோசங்களோடு
பெஜ்ரோக்களில் வரும்
நம் தலைவர்கள்
எங்கே போனார்கள்..?

பள்ளிகளுக்குள் சுட்டபோது
நாம்
பாத்திஹா ஓதிக் கலைந்தோம்.
கபுறடியை உடைத்த போது
நாம் கதைகள் சொல்லி பிரிந்தோம்
இப்போது
பள்ளியை உடைக்கிறார்கள்.
நாம்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என்ன கவலை..?
எங்கே போனது
எம் தலைவர்;களின்
ஈமானின் ஈரத்தன்மை!
இருப்புக்களும்
இனிமேல் கேள்விக் குறிதானா..?

ஹிந்தாவின்
ஈரல் கதை சொல்லும்
உலமாக்களே..!
மஹிந்தாவின் கீறல் கதை
சொல்லமாட்டீர்களா..?

முஸ்லிம்களை குறிவைக்கும்
இந்த
மாற்று அரசியலிடம்
தோற்றுப்போன சமூகத்தை
தூக்கிவிட யார் முன்வருவீர்கள்;..?

தலைவர்களே..?
முதலமைச்சர் கோசத்தை
கொஞ்சம் தள்ளி வைத்துவிடுங்கள்.
முஸ்லிம்களின்
பள்ளிகளையும், இருப்புக்களையும்
பாதுகாக்க வழி சொல்லுங்கள்.

கள்ளியங்காட்டில்
பறிபோனது
நமது பூர்வீகப் பள்ளி வாயல்.
இப்போது
அறுபது வருடத்துப் பள்ளிவாயல்
தம்புள்ளயில்  தரைமட்டமாகிறது.

அரச வைபவம் அத்தனைக்கும்
சிரசாய் நின்று
துஆ ஓதும் உலமாவே..!
நீங்களாவது மஹிந்தவிடம்..
கேட்கமாட்டீர்களா..?
அல்லாஹ்விடம் நாங்கள் கேட்கிறோம்

நன்றி – காத்தான்குடி இன்போ

No comments:

Post a Comment