காத்தான்குடியின் மூத்த சமூக சேவையாளரும் முகைதீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவரும் ஆவன்னா மாவன்னா என்றழைக்கப்படும் அஹமது மீரா சாஹிப் ஹாஜியார் அவர்கள் மரணமடைந்த போது எழுதிய கவிதை
-மதியன்பன்-
கண்ணை மூடிக் கொண்டது
காவியக் குயிலொன்று
தனது
தொண்ணூற்றி ஏழாவது வயதில் !
எங்களையெல்லாம்
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டது
அந்த
மீராசாஹிப் எனும் மெல்லிய குயில்.
சிறகுகள் இருந்த போதெல்லாம்
அந்தக் குயில்
சின்னச் சின்ன சிக்கல்களையெல்லாம்
சீக்கிரம் தீர்த்து வைத்தது.
இந்தக் குயில்
இளம் பிறையோடும்
இன்னும் பல வளர் பிறைகளோடும்
இணைந்திருந்து
சம்மேளனம், இன்னும் பல
உருவாக கருவாக நின்றது.
தன் ஆயுள் காலத்தை
அல்லாஹ்வின் இல்லத்திற்காய்
அர்ப்பணம் செய்து செர்ப்பணம் கண்டது
இந்த அதிசயக் குயில் !
அதனால்
இளமை தொட்டு முதுமை வரை
பள்ளிவாயல் பணிகளை
தன் தோள்மீது
தூக்கிப் போட்டுக் கொண்டது.
ஆவன்னா மாவன்னா
எனும்
இந்த அழகிய நாமக் குயில்
ஊர்த்தலைவர்களுடன்
ஒன்றாகக் கூவித் திரிந்தது.
தேவைகளை
காவித்திரிந்து தீர்த்து வைத்தது.
வீட்டுக்குள் இருந்த போதே
இந்தக்குயில்
பொதுப் பணிகளுக்காய்
தன்வாழ்வின் முழுப்பகுதியையும்
முடக்கிக் கொண்டது.
தலைவனும் தொண்டன்தான்
என்பதை
இந்த இனிய குயில்
தாரக மந்திரமாய்க் கொண்டது.
இதனை
தன்வாழ்வில் செய்தும் நின்றது.
பதவிகள் பெருமைப்பட
இந்தக் குயில்
பல இடங்களில் பணியாற்றிச் சென்றது.
பட்டிண ஆட்சி மன்றம்
இதற்கு
பலத்த ஆதாரமாய் நின்றது.
மெத்தைப்பள்ளி, சம்மேளனம்
ஜாமியத்துல் பலாஹ்
இன்னும் பல நிறுவனங்கள்
இந்தக்குயிலின் இறக்கைகளால்
தூக்கிச் சுமந்து கட்டியவை.
ஊரிலிருந்த
வௌ;வேறு குத்பாக்களை
ஒன்றாக மாற்றிட
ஓயாதுழைத்தது இநத சமாதானக்குயில்
நமதூரின்
மூத்த அறிஞர்களுள்
இந்தக் குயில் முதுமையானது
மார்க்கத்தை கற்றுக் கொண்டதால்
நமக்கெல்லாம்
மனிதத்தை கற்றுத் தந்தது.
இந்தக் குயிலின் இறப்புச் செய்தி
எங்கள்
கண்ணீரையும் செந்நீராக்கி
கன்னங்களையும், கல்புகளையும்
ஒருகணம்
கரைய வைத்துவிட்டது.
அமைதியாய்ப் போன ஆழுமை!
அஹமட் மீராசாஹிப்
வல்ல அல்லாஹ்!
இந்த இனிய குயிலின்
பாவங்களை மன்னித்து
சுவனத்திற்கு சொந்தக்காரனாக
ஆக்கியருள்வாயாக..!
No comments:
Post a Comment