மதியன்பன்
அவனிப்போது
அந்நியப் பட்டுக் கிடக்கிறான்
மருந்து மாத்திரைகள்
அவனது
தலைமாட்டில் தவமிருக்கிறது
சொகுசாக வாழ்ந்தவன்
இப்போது
ஊஞ்சல் பலகை மேல்
உணர்விழந்து கிடக்கிறான்.
விளக்கு
ஒளியிழக்கும் போது
விலகிச் செல்லும் விட்டில்களாய்
வந்தவர்கள்
விசாரித்து விட்டுச் செல்கிறார்கள்
உறவுகள் மட்டும்
அங்கே
ஒட்டிக் கிடக்கிறது
அவனை
அடக்கி விட்டுச் செல்வதில்
அத்தனை அக்கரை அவர்களுக்கு..
இப்போதெல்லாம்
அவனுக்கு
பெயர்கூட சொந்த மில்லை.
மையித்
மரக்கட்டை என்றாயிற்று..
அவனால் முடியவில்லை
குளிக்க வைத்தார்கள்
அவனுக்காக
தொழுகை நடாத்தினார்கள்
அவனை
தூக்கிச் சென்றார்கள்
மண்ணறையில் வைத்து
எல்லோரும்
பிரார்த்தனை செய்தார்கள்
பின்னர்
பிரிந்து சென்றார்கள் ஏக்கத்தோடு.
அவன்
உலக வாழ்க்கையில் இருந்து
இப்போது
ஓய்வெடுத்துக் கொண்டான்
அவன்
வளர்த்த பிள்ளைகள்
சேமித்த சொத்துக்கள்
சேர்த்து வைத்த உறவுகள்
அத்தனையும்
மண்ணறையோடு மறைந்து விட்டது.
இப்போது
அவன் கொண்டு செல்வது
சேர்த்து வைத்த நன்மைகள் மட்டுமே..
அதைமட்டும்தான்
அவனால்
எடுத்துச் செல்ல முடிகிறது
உலகம்
பரீட்சை மண்டபம்
பரீட்சையின் வெற்றி தோல்வி
மறுமையில்தான்
சொர்க்கமோ நரகமோ..
நாளை
அங்குதான் நிர்ணயிக்கப்படும்
18.05.2014
No comments:
Post a Comment