02 April 2013

தியாக வரலாறும், நமது நிலைப்பாடும்


 - மதியன்பன்-

(இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கவிதையல்ல என்பதை வாசிப்பவர்கள் கவனத்திற் கொள்ளவும்)


மனிதக் காலடிகள்
தொடாத -
பாலை வனத்தின் புழுதி நிலத்தில்
அன்பு மனைவி
அருமை மைந்தன்
இருவரையும் இப்றாஹீம் நபி
தன்னந் தனியே
தவிக்கவிட்டுப் போனது
வரலாற்றின் தியாகப் பாடம்.


இதுமட்டுமா தியாகம்
இல்லையில்லை
இன்னுமிருக்கின்றன
ஏராளமான தியாகங்கள்

தியாகத் திருநாளை
கொண்டாடும்
பிறை மகனே...!
உன் நெஞ்சத்தில் கை வைத்து
உன்னை நீயே கேட்டுப்பர்!

இஸ்லாம் என்ற
தியாக சமுத்திரத்தில்
நீயும் ஓர் நீர்த் துளியா...?
இல்லை - நீ ஒரு
தீவாகி - தனித்திருக்கிறாய்...

நீ மட்டுமல்ல
வாலிபம் சுமக்கின்ற
ஜீவன்கள் எல்லமே
தீவுக் கூட்டங்களாய்
சிதறிக் கிடக்கின்றன.
எந்த ஒரு -
காரியத்தை செய்தாலும்
அதில் -
தியாகத்திற்குப் பதிலாக
வியாபித்திருப்பது
சந்தர்ப்ப வாதமும்,
சுய நலமும் தான்!

இஸ்லாமியப் புத்தகத்தின்
தியாகப் பக்கங்களில்
திருமணமும் ஒன்று!
அதை நீயொரு
மஞ்சல் பத்திரிகையாய்
மலினப் படுத்தி விட்டாய்!

பெட்டைக் குருவி
அடை காத்து குஞ்சு பொரிக்க
குச்சிகளைப் பொறுக்கும்
ஆண் குருவியை அவதானித்தாயா...
அதன் தியாகத்தை
ஒரு கனம் சிந்தித்தாயா..?

தியாகத்தின் சின்னமான
ஹஜ்ஜைக் கூட
நீ -
உன் சொந்த நலனுக்காய்
கொச்சைப் படுத்தி விட்டாய்!
ஒரு -
சொகுசுப் பயணமாய்
அதை நீ -
இலகு படுத்தி விட்டாய்!

குளிரூட்டிய -
நட்சத்திர ஹோட்டல் அறையில்
மூக்கு முட்டத் திண்று விட்டு
கஃபாவை - சுற்றுவது போல்
கடைத் தெருக்களை
சுற்றிக் கொண்டிருக்கிறாய்!
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்

இறுதிப் பயணம்
என்று -
எண்ண வேண்டிய பயணமிது!

புறப்பட்டு
மக்கா சென்ற மறுகணமே
தொலைபேசியில் தொடர்பு கொண்டு
ஊரில் உள்ள சொத்துக்கள்
பத்திரமா என்று -
பார்த்துக்கொள்கிறாய்...!
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்.

கபன் உடையை
நினைவூட்டும்
இரண்டு துண்டு
இஹ்றாமை அணியும் போதே
எதைக் கொண்டுவரலாம்
என்று நீ
எண்ணிக் கொள்கிறாய்!
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்.

ஹஜருல் அஸ்வதை
முண்டியடித்துக் கொண்டு
முத்தமிடுகிறாய்...
உன் -
கறுத்துப் போன உதடுகளால்
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்

உனக்கு கீழே பணி புரியும்
ஊழியர்களின்
கண்ணீரைத் துடைக்காமல்
அங்கே நீ
ஸம் ஸம்
தண்ணீரை அருந்துகிறாய்
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்.
சாத்தானுக்கு
கல் எறிகிறாய் -
நீயே ஒரு
இரக்கமில்லாத
கற்பாறையாக இருந்து கொண்டு.
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்.

உன்னிடம் -
பணம் கேட்டு வந்த
உறவுகளை யெல்லாம்
ஓட ஓட விரட்டிவிட்டு
நீ மட்டும் அங்கே -
தொங்கோட்டம் ஓடுகிறாய்.
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்.

வர்த்தகம் செய்கின்றேன்
என்ற பெயரில்
வட்டியோடு சேர்த்து
ஏழைகளின் பொருளாதாரத்தை
அறுத்தறுத்தே
பெருத்துப் போன நீ
அங்கே போய்
குர்பான் கொடுக்கிறாய்
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்

அப்பாவி மக்களை
அவர்களின் பொருளாதாரத்தை
முற்றிலுமாய்ச் சுரண்டி
மொட்டை யடித்து விட்டு
அங்கே போய்
நீயும் கூட
மொட்டையடித்துக் கொள்கிறாய்
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்

கூடாரத்துக்குள்ளே
நமது -
குமருகளும், குழந்தைகளும்
குற்றுயிராய் கிடக்க
நீ மட்டுமங்கே
அரபா வெளியில்
அமர்ந்து கொள்கிறாய்
அமல்களில்
இணைந்து கொள்கிறாய்
இதிலே எப்படி
தியாகம் பிறக்கும்

கறைகளை போக்குவதற்குத்தான்
கஃபாவிற்குப் போகிறாய்...
தப்பென்று சொல்லவில்லை.
பயணப் படும் போதே
தியாகத்தை உதறி விட்டு
சுய நலத்தை
சுமந்து செல்கிறாய்
அதைத் தான்
சரியில்லை என்கிறேன்

தியாகம் என்றால் என்ன..?
கொஞ்சம் என்னோடு வா!
அர்த்தம் புரியும்

உனது உள்ளத்தில்
உன்னைப் பற்றிய
எண்ணங்களை எடுத்துவிட்டு
அடுத்தவனைப் பற்றி
சிந்திக்க ஆரம்பி
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

அறுசுவை உண்டிகளை
அருந்து முன்னால்
வறுமை
முற்றுகையிட்டிருக்கும்
பக்கத்து வீடுகளை
கொஞ்சம் சிந்தித்துப்பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்!
பணத்தை
தண்ணீராய் செலவு செய்து
சந்தோசிக்கும் வேளை
உனது சகோதரணைக் கொஞ்சம்
கவனத்தில் எடு
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

தவறுகள் செய்ய
சந்தர்ப்பம் இருந்தும்
அவற்றை யெல்லாம்
தவிர்த்துக் கொண்டு
ஓடிவந்து பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

கடன் கேட்டு
காலைப் பிடிக்கும்
சகோதரனுக்கு
அதனைக் கொடுத்துவிட்டு
அப்புறம்
வேண்டாம் என்று சொல்லிப்பார்
அப்போது உனக்கும்
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

உனக்கு -
தீது செய்த ஒருவனுக்கு
உதவி செய்து பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

சீதனம் இல்லாமல்
ஒரு மாதை திருமணம் செய்து பார்
போதையின் பாதையில்
போக மாட்டேன் என்று
பிரமானம் எடு
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

வாலிபம் சுமக்கும்
கேளிக்கைக் கனவுகளுக்கு
வேலிகட்டிப்பார்!
அடுத்தவர்களுக்கு
மலர் மஞ்சம் கொடுத்துவிட்டு
முற் படுக்கையில்
நீ உறங்கிப்பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

கொடுக்க மறுக்கும்
மனசுக்கு -
ஒரு
குட்டுப் போட்டு விட்டு
அள்ளி வழங்கிப் பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்  

கவர்ச்சி நடிகைகளின்
அரை நிர்வாணத்தை
அப்பியிருக்கும்
சின்னத்திரைகளை
சிறை வைத்து விட்டு
திருமறை குர்ஆனின்
நீங்காரத்தைக் கேட்டுப்பார்
அப்போது உனக்கு
தியாகத்தின்
அர்த்தம் புரியும்

சினிமாப் பாடல்களை
முணுமுணுக்கும் உதடுகளில்
குர் ஆனைக் கொஞ்சம்
குடியமர்த்திப் பார்
அப்போது உனக்கு
தியாகத்தின் அர்த்தம் புரியும்

மூட நம்பிக்கைகளில்
மூழ்கிப்போயிருக்கும்
முஸ்லிம்களுக்கு -
வழிகாட்டும் பணியில்
சில -
வலிகளைத் தாங்கிப்பார்!
அப்போது உனக்கு
தியாகத்தின் அர்த்தம் புரியும்
தியாகத்தில் பிறந்ததே
தீனுள் இஸ்லாம்
எந்தத் தியாகத்தையுமே
புரியாமல்
எப்படி நீ
தியாகத் திருநாளை
கொண்டாடப் போகிறாய்

பிறை மகனே...
இனியாவது
தியாகத்தின் அர்த்தம் புரிந்து
தீன் சுடராய் மாறு!
அடுத்த முறையாவது
அர்த்தமுள்ள
தியாகத் திருநாளை
எல்லோரும் கொண்டாடுவோம்.  

காத்தான்குடி மதியன்பன்
(எம்.எஸ்.ஏ. மஜீத்)
094 776684848

No comments:

Post a Comment